X

மருத்துவமனை தேடிச் சென்றாலே மருத்துவம் இல்லை என்ற அவல நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. மருத்துவக் கல்வி இயக்கம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்கம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், முதல்-அமைச்சரிடமும் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியை வகிப்பவர் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். ஏற்கனவே 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிர்வகித்து வரும் முதல்வரால் பல மருத்துவக் கல்லூரிகளை மேற்பார்வையிடுவது என்பது மிகுந்த சிரமம். இதே போன்று ஏற்கனவே குடும்ப நலத்துறை இயக்குநர் பொறுப்பை வகித்து வருபவரிடம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் பதவியும் கூடுதல் பொறுப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகமாக இருக்கின்ற நிலையில், அவர்களை இயக்குநர்களாக நியமிக்கும் பட்சத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணிகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பதவியே காலியாக உள்ளது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக, மருத்துவச் சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இல்லந்தேடி மருத்துவம் என்று தி.மு.க. அரசு சொன்னாலும், யதார்த்தத்தில் மருத்துவமனை தேடிச் சென்றாலே மருத்துவம் இல்லை என்ற அவல நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. அரசின் திறமையின்மை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள்தான். முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்க ழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.