மருத்துவமனையை சுத்தம் செய்த அமித் ஷா
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒருவார காலம் தொடர்ச்சியாக சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்தது. அதன்படி பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சமூக சேவை தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சேவை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தார். அமித் ஷாவுடன் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, விஜய் கோயல், விஜேந்தர் குப்தா உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்வித்தனர்.
இதேபோல் உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், கட்சி நிர்வாகிகளுடன் ஹமிர்பூரில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். மற்ற மாநிலங்களிலும் தூய்மைப்பணி உள்ளிட்ட சேவைகளை தொடங்கினர்.
இதுபற்றி அமித் ஷா கூறுகையில், “பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் சேவை வார கொண்டாட்டத்தை இன்று தொடங்குகின்றனர். நமது பிரதமர் நாட்டிற்கு சேவை செய்வதற்காகவும், ஏழைகளுக்கு பணியாற்றவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். அதனால், அவரது பிறந்த வாரத்தை சேவை வாரமாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும்” என்றார்.