Tamilசினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று சந்தித்தனர். இதையடுத்து பாரதிராஜா தான் வீடு திரும்பிய செய்தியை நடிகர் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன்.

ஓகே சீயூ லேட்டர் ஃபார் சூவேர், பாய் என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.