Tamilசினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பதிவிட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார். அவருக்கு பாதிப்பு இருப்பது பற்றி அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் பதிவிட்டனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்த நிலையில், கடந்த ஜனவரி 17ந்தேதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவுக்கு முன்னும், பின்னும்… மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பது போன்று உணர்கிறேன். ஆனால், உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில், பன்முக தன்மை கொண்ட உங்களிடம் வந்து, உங்களுடன் நேரம் செலவிட கூடிய மருத்துவர்களை நீங்கள் சந்திக்கும்போது, இந்த காய்ச்சலெல்லாம் மோசமென தோன்றவில்லை. என்னவொரு தொடக்கம் உங்களை சந்திப்பதில் மகளிர் தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்குகிறது மருத்துவர் பிரீத்திகாசாரி அவர்களே! என அதில், தெரிவித்து உள்ளார்.

அதனுடன், தனக்கு சேவை செய்யும் மருத்துவருடன் புன்சிரிப்புடன் இருக்க கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் பற்றி அறிந்ததும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வலைதள பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.