மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகி பரவை முனியம்மா!
மதுரையை சேர்ந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, தூள் முதல் மான் கராத்தே வரை பல படங்களிலும் நடித்து பிரபலமானார். 83 வயதான அவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறது. இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வருகிறார்.
சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை. நேற்று மதியம் ‘பரவை’ முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்டார்.
இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் விசாரித்தனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.