தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார். முன்னதாக ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக சென்றார்.
ஜம்புத்து மலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் சண்முகவடிவு பணி நேரத்தில் சுற்றுலா சென்றதாக புகார் எழுந்தது. மேலும் அங்கு பணியாற்றும் மற்றொரு டாக்டர் தினகரன், அவரது மகனை சட்டத்திற்கு புறம்பாக அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணி செய்ய அனுமதித்ததாகவும் புகார் எழுந்தது.
அது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் உறுதியானதால் 2 டாக்டர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.
அக்னிபாத் விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியதைபோல, ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வது ஏற்புடையதாக இருக்காது. எனவே மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.