மரியுபோல் நகரில் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை – உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். அங்கிருந்து வெளியேற முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும். இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷியா எச்சரித்துள்ளது.
ஆனால், சரணடைய மாட்டோம் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் தெரிவித்துள்ளார். தொடர் சண்டையால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயுதங்களை கீழே போடுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதுகுறித்து ஏற்கனவே, நாங்கள் ரஷியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என இரினா தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அதிகமாக ரஷியன் மொழி பேசுபவர்களை கொண்ட மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷியா ஆர்வம் காட்டுகிறது. இந்த நகரை கைப்பற்றினால் ஏற்கனவே கைப்பற்றி தங்களுடன் இணைத்துள்ள கிரிமியாவிற்கு ரஷியா படைகள் சென்று வர முக்கிய வழித்தடமாக மாறிவிடும்.
மரியுபோல் நகரில் 4 லட்சம் மக்கள் போதுமான குடிநீர், உணவு இல்லலாமல் தவித்து வருகிறார்கள். கருங்கடலுக்கான ரஷியாவின் மூத்த கடற்படை கமாண்டர் போரில் இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உடனடி பேச்சுவார்த்தை மட்டுமே ரஷியா இழப்புகளை குறைக்க ஒரே வழி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.