X

’மரிஜுவானா’ – திரைப்பட விமர்சனம்

காவல் நிலையத்தில் வைத்தே குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் அதிரடி காவல் துறை அதிகாரி ரிஷி ரித்விக். காவல் துறை அதிகாரியான ஹீரோயின் ஆஷா பார்த்தலோம், ரிஷி ரித்விக் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே, சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அமைச்சரின் மகன் மற்றும் திரையரங்க ஊழியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் சிலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, அந்த வழக்கை விசாரிக்கும் ரிஷி ரித்விக், கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார், அவர் யார்? அவர் ஏன் இவர்களை கொலை செய்தார்? என்பதற்கான கேள்விகள் தான் படத்தின் கதை.

’மரிஜுவானா’ என்பது கஞ்சாவின் அறிவியல் பெயர். தலைப்பே கஞ்சாவை குறிப்பதால், இந்த கதையும் கஞ்சாவை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. போதையால் ஏற்படும் தீமைகளை சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.டி.ஆனந்த், அந்த போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை விட அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு, அவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

‘அட்டு’ திரைப்படத்தில் ரவுடியாக கத்தி சுற்றி கலக்கிய ரிஷி ரித்விக், இதில் அதிரடி போலீஸாக வலம் வருகிறார். ஆக்‌ஷன் நடிப்பு என்று அனைத்திலும் நிறைவாக நடித்திருப்பவர், தனது பேவரைட் கத்தி சுற்றுவதை, இந்த படத்திலும் ஒரு காட்சியில் செய்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கி விடுகிறார்.

அறிமுக நாயகி ஆஷா பார்த்தலோம் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. காவல் துறை அதிகாரியாக நடித்தாலும், காதல் காட்சியிலும், பாடல் காட்சியிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் இளைஞரின் கதாப்பாத்திரமும், அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது. காமெடிக்காக வரும் பவர் ஸ்டார் சீனிவாசனை பார்த்தால் சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வருகிறது. அதே சமயம், போலீஸ் வாகனம் ஒட்டுநர் வேடத்தில் நடித்திருப்பவர் தனது மைண்ட் வாய்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்.

கார்த்திக் குருவின் இசையும், பாலா ரோஸய்யாவின் ஒளிப்பதிவும் நேர்த்தி. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் இவர்களின் பணி தரமாக உள்ளது.

முதல் படத்திலேயே சமூக சிந்தனை உள்ள கதையை தேர்வு செய்து படமாக்கியிருக்கும் இயக்குநர் எம்.டி.ஆனந்தை பாராட்டியாக வேண்டும். நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய குற்றச்செயல் போதைப்பொருள். அந்த போதை கலாச்சாரம் எதனால் அதிகரிக்கிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, என்பதை அழுத்தமாகவும், கமர்ஷியலாகவும் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

படத்தில் இடம் பெறும் சில இரட்டை அர்த்த வசனங்களை கூட நகைச்சுவையாக சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் எம்.டி.ஆனந்த், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, திரைக்கதையில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தொடர் கொலைகளின் குற்றவாளி யார்? என்பது தெரிந்த பிறகு படத்தின் வேகம் சற்று குறைவது படத்தின் குறையாக இருக்கிறது. அந்த சிறு குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், படம் நேர்த்தியாகவும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் முக்கியமானதாகவும் இருப்பதோடு, இளைஞர்கள் இப்படி போதையின் பாதையில் செல்வதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்பதையும், மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள்.

மொத்தத்தில், ‘மரிஜுவானா’ இளைஞர்களுக்கான படமாகவும், பெற்றோர்களுக்கான பாடமாகவும் உள்ளது.

-ரேட்டிங் 3/5