உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி, பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மக்கள் நிரந்தரமாக மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாகும்.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த சேவையை சமீபத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
இயற்கை சீற்றங்களால் மரங்கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டுமான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றாலோ, இந்த ‘Tree Ambulance’ சேவையை தொடர்பு கொண்டால் மரத்திற்கு எவ்வித சேதமுமின்றி கொண்டு செல்லப்படும்.
இந்த மரங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் நடப்படும். இந்த சேவையை தொடர்பு கொள்ள 9941006786 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.
இது ஒரு இலவச எண் ஆகும். இது குறித்து இயற்கை ஆர்வலர் அப்துல்கனி கூறுகையில், ‘தன்னார்வ தொண்டாற்றுவதில் விருப்பம் உள்ளவர்களை வைத்து இந்த சேவை செய்யப்படுகிறது. ஆட்கள் இல்லாத இடங்களில் சிறிய இயந்திரங்கள் மூலம் மரங்கள் காப்பாற்றப்படுகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிலும் சென்னையில்தான் முதன்முறையாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டது’ என கூறினார்.
மேலும் இதன் அடுத்தகட்டமாக மரங்களை வேரோடு எடுக்கும் ஹைட்ராலிக் இயந்திரங்களை கொண்டு செயல்பட தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஹைட்ராலிக் இயந்திரங்கள் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம், 100 ஆண்டுகள் பழமையான மரங்களையும் கூட இலகுவாக தாய் மண்ணுடன் பெயர்த்து எடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் மற்றொரு இடத்தில் நட்டுவிடும்.
மரங்களை காக்கும் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் வாங்க அதிக செலவாகும் என்பதால் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என சாசா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.