Tamilசெய்திகள்

மயிலாப்பூர், தியாகராயாநகர் மெட்ரோ ரெயில் பணி 2028 ஆம் ஆண்டு முடியும் – அதிகாரிகள் தகவல்

சென்னையில் 2-ம் கட்டமாக 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 119 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

இப்பகுதியில் சுரங்கப்பாதை, உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதில் மயிலாப்பூரில் உள்ள திருமயிலை மெட்ரோ ரெயில் நிலையம் 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை இணைக்கும் ஒரு முக்கியமான பாதையாகும்.

வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழியாக செல்லும் ரெயில்களும் திருமயிலையை கடந்து தான் செல்கிறது. திருமயிலை மெட்ரோ ரெயில் நிலையம் மயிலாப்பூரில் உள்ள ஒரு பரிமாற்ற நிலையமாகும். அதன் சவாலான வடிவமைப்பு காரணமாக கட்டப்படுவதற்கு நேரம் அதிகம் தேவைப்படலாம். இந்தப் பாதைகளில் சேவை வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து 2028-ம் ஆண்டு வரை படிப்படியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மயிலாப்பூரில் கட்டப்பட உள்ள ‘திருமயிலை மெட்ரோ ரெயில் நிலையம்’ லஸ் சந்திப்பில் 35 மீட்டர் ஆழத்தில், ‘டி’ வடிவில் கட்டப்படும் ரெயில் நிலையம் 3 நிலைகளில் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட 4 சுரங்கங்களுடன் கட்டப்படுகிறது.

மாநகரில் முதல் கட்டத்தில் கட்டப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் 2-ம் கட்டத்தில் கட்டப்பட உள்ள ரெயில் நிலையங்களிலேயே இது மிகவும் ஆழமானதாகும். முதல் கட்டத்தில் அதிகபட்சமாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் 30 மீட்டர் ஆழத்தில் 2 அடுக்குகளாக கட்டப்பட்டு உள்ளது.

லஸ் சந்திப்பில் பாறை, மண்ணை வெட்டிக் கட்ட வேண்டியிருப்பதால் இந்த ரெயில் நிலையம் அமைப்பது என்பது ஒரு பொறியியல் சவாலாக இருக்கும். இந்த ரெயில் நிலையம் லஸ் சந்திப்பின் கீழ் 4 ஆயிரத்து 854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில், சந்திப்பு முழுவதும் 5 நுழைவு வாயில்களை கொண்டிருக்கும். இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரெயில் (எம்.ஆர்.டி.எஸ்.) நிலையத்தையும் இணைக்கும் வகையில் மல்டிமாடல் மையமாகவும் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

லஸ் பஸ் நிறுத்தம் மற்றும் கபாலீசுவரர் கோவிலை எளிதாக அடைய முடியும். குறிப்பாக, வழித்தடம் 3-ல் உள்ள ஆயிரம் விளக்கு மெட்ரோ ரெயில் நிலையம் முதல் திருமயிலை மெட்ரோ மற்றும் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ முதல் திருமயிலை மெட்ரோ, வழித்தடம் 4-ல் உள்ள தியாகராயநகர், பனகல் பூங்கா மெட்ரோ முதல் திருமயிலை மெட்ரோ வரை உள்ள பாதைகள் வருகிற 2028-ம் ஆண்டு நிறைவடையும்.

மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ரெயில்கள் வழித்தடம் 3-ல் இணைக்கப்படும்போது, புரசைவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர், சிறுசேரி மார்க்கமாக உள்ள பாதையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு மயிலாப்பூரில் இருந்து நேரடி ரெயிலில் செல்லலாம். அதேபோல் மயிலாப்பூரில் இருந்து செல்லும் மெட்ரோ பயணிகள் சென்டிரல் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் தற்போதுள்ள விமான நிலையத்துக்கு எளிதாக செல்ல முடியும்.

அதேபோல் வழித்தடம் 4-ஐ பரந்தூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் நேரடி ரெயிலில் பரந்தூரில் உள்ள புதிய விமான நிலையத்தில் இருந்து மயிலாப்பூருக்கும் செல்ல முடியும். எனவே மாநகரங்களின் முக்கிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயிலில் செல்ல வருகிற 2028-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.