மம்மூட்டிக்கு தம்பியான ஜெய்!
ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மதுர ராஜா. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.