மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! – 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.