மம்தா பானர்ஜி டெல்லி வந்தால் அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? – அமித்ஷா கேள்வி

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது.

“வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்கு வந்து, மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா அதற்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

நான் ஒரு தேசிய கட்சியின் தலைவர். பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் அங்கமான மேற்கு வங்காளத்துக்கு வரும்போது என்னை ‘வெளிநபர்’ என்று சொல்கிறார்கள். என்ன பேச்சு இது?

அப்படியானால், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பைக்கோ, பெங்களூருவுக்கோ போகும்போது அவரை ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா? மம்தா பானர்ஜி டெல்லிக்கு செல்லும்போது அவரையும் ‘வெளிநபர்’ என்று சொல்லலாமா?

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், ஒரு வங்காளியைத்தான் முதல்-மந்திரி ஆக்குவோம். நானோ அல்லது இந்த மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்-மந்திரி ஆக மாட்டோம்.

நான் வாகன பேரணி சென்றபோது தாக்கப்பட்டேன். இதை சில ஊடகங்கள், நாங்கள்தான் மோதலை ஆரம்பித்ததுபோல் செய்தி வெளியிட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் எங்கள் வாகன அணிவகுப்பை தாக்கினர். ஆனால், இதை வேறுமாதிரி திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools