இந்தியாவின் தலைநகர் மாநிலமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்- அமைச்சரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது.
இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது. அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. முதல்-அமைச்சர் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் கிடையாது. இதனால் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாட இருக்கிறார். இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.
கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.