மன்னிப்பு கேட்க முடியாது – அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை பதில்

திமுக பிரமுகர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, டிஆர் பாலு உள்பட திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து பட்டியல் என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை சில ஆவணங்களை கடந்த வாரம் வெளியிட்டார்.

இதற்கு அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் ஆவணங்கள் போலியானவை என்றும் அவற்றில் உண்மையில்லை என்றும் திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றீர்கள், சொத்துப் பட்டியல் தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் அண்ணாமலை மீது சிவில் அல்லது குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ. 50 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளிவிவரங்கள் அனைத்தும் சரியானவை. இது தொடர்பான வழக்கு எனது குரலை அடக்கும் முயற்சி ஆகும். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்க முடியாது,’ என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools