மன்னர் திருமலை நாயக்கருக்கு முழு உருவ வெண்கல சிலை – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
மன்னர் திருமலை நாயக்கரின் 438-வது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு செய்தி மக்கள் துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கலந்து கொண்டார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
ஜெயலலிதா நாட்டுக்கு உழைத்த நல்லவர்களையும், மொழிப்போர் காத்த தியாகசீலர்களை எல்லாம் போற்றி புகழ்ந்து அவர்களுக்கு சிலை எழுப்பி மணிமண்டபங்கள் அமைத்தார். மேலும் அவர்களது பிறந்த நாளில் அரசு விழாவாக கொண்டாடி மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்தநாள் விழாவினை அரசு விழாவாக கொண்டாடிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று கொண்ட ஜெயலலிதா, மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி தற்போது செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் விழா நடத்தப்பட்டு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டு வருகிறது.
தென் இந்தியாவில் உள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில்வாய்ந்த அரண்மணை மன்னர் திருமலை நாயக்கர் மகால் தான். எனவே தான் இங்கு தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருமலைநாயக்கர் மகால் வளாகத்தில் உள்ள திருமலை நாயக்கர் சிலை எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை முழு உருவ வெண்கல சிலையாக அமைக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று கொண்ட முதல்-அமைச்சர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.