இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்ற இளம் இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தினார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் தனது முதல் கணவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஷிகார், ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை ஷிகர் தவான் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவார். கிரிக்கெட் தொடருக்காக வெளிநாடு சென்றாலும், தனது குடும்பத்தையும் தவான் அழைத்து செல்வார்.
இந்த நிலையில் ஷிகர் தவானும், ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தங்களது விவாகரத்து குறித்து ஒரு நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.
சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.
இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன்.
விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து. நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து. விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. ஷிகர் தவான் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.