X

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை அல்ல! – உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது. அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் வந்துள்ளார். அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.

கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார்.

நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில் கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு, தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார்.

தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்.

அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.