மனைவியை பிரிந்தார் இயக்குநர் பாலா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார்.
தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள்.
இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.