உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் தாவணியால் மனைவியின் கழுத்தை சுற்றி சுருக்கு போட்டு இழுத்தார். இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நொறுங்கி அங்கேயே பிணமானார். மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த கணவர் பிணத்துடன் செல்பி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
பிறகு செல்பி காட்சிகளை அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை தொடர்பு கொள்ள செல்போனில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த நபரின் தம்பி காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.
அதே அறையில் கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.