ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆந்த்ரே ரஸல் நள்ளிரவில் தனது 31-வது பிறந்த நாளை மனைவி ஜாசிம் லோராவுடன் கொண்டாடினார். அவரிடம் ஜாசிம் லோரா ஜாலியாக பேட்டி கண்டார்.
அப்போது ரஸ்செல் கூறுகையில், ‘இன்றைய இரவு எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த வெற்றி எனக்கு பிறந்த நாள் பரிசு. ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன். அதனால் எனக்கு எப்பொழுதும் நெருக்கடி இருப்பதாக உணர்வேன்’ என்றார். ரஸ்செலின் மனைவி ஜாசிம் கூறுகையில், ரஸ்செலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து இந்த மாதிரியான பேட்டிங்கை எதிர்பார்த்தேன். ஏனெனில் இந்த சீசனில் உள்ளூரில் (கொல்கத்தா) நடந்த கடைசி ஆட்டம் இதுவாகும். அவர் பந்தை சிக்சருக்கு விரட்டியபோதெல்லாம் என்னை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டு உற்சாகத்தில் திளைத்தேன்’ என்றார்.