மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் பறப்பதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடி பிடிக்கும் நோக்கில் இந்திய விமானப்படை இரண்டு ரஃபேல் ஜெட் விமானங்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியது.
நேற்று (நவம்பர் 19) மதியம் சுமார் 2.30 மணி அளவில் இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்ததால், வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
“இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறப்பதாக தகவல் கிடைத்ததும், அருகாமையில் உள்ள விமான தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. இந்த விமானத்தில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன.”
“போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்திலேயே சென்று சந்தேகத்திற்குறிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இம்பால் விமான நிலையம் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பறக்கும் தட்டு பதிவாகி இருப்பதால், அதனை வைத்து தொடர் விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது,” என பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.