மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில்தான் தி.மு.க. அரசு மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதிமன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுகிறது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட 17.4.1997 முதல் 2023 செப்டம்பர் வரை இந்த ஆணையத்திற்கு வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் திருப்பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
எந்த இடத்தில், எவர், எதனால் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த இடத்திற்கு, உடனே விரைந்து சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரை விடுவித்துக் காப்பாற்றும் இதயம் கொண்டது இந்த அரசு.
இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம்! அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம்! மண்ணில் மனிதம் காப்போம்!-என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போமாக.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.