மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அனுமதி
இஸ்ரேல் தொடுத்துள்ள போரால் நிலைகுலைந்து காணப்படும் காசாவில் எங்கு நோக்கினும் கட்டிட இடிபாடுகளாகவே காட்சியளிக்கின்றன. அங்கு வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கடைசி ஹமாஸ் போராளியையும் அழித்தொழிக்கும் நோக்கில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி வருகிறது.
காசாவின் மிகப்பெரிய அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது சர்வதேச எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. அங்கே ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக கூறி நுழைந்த ராணுவம், அத்தகைய சந்தேகத்துக்கு இடமான பகுதி எதையும் அங்கே கண்டுபிடிக்கவில்லை.
அங்கு நின்றிருந்த வாகனம் ஒன்றில் சில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஹமாஸ் அமைப்பினரின் ஒரு சில தளவாடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு பொய்யாகி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்தும் நடவடிக்கையை நீடித்து வரும் இஸ்ரேல் ராணுவம், அடுத்ததாக தெற்கை நோக்கி நகரும் முடிவில் உள்ளது.
வடக்கில் இருந்து லட்சக்கணக்கில் தெற்கில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்கள் இதனால் பெரும் துயரை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அண்டை நாடான எகிப்தும் காசா அகதிகளை ஏற்க மறுத்து விட்டது.
எனவே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மவாசி நகருக்கு இடம்பெயருமாறு காசா மக்களை இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சில சதுர கி.மீ. மட்டுமே பரப்பளவு கொண்ட அந்த பகுதியில் பெருமளவிலான இந்த மக்கள் தஞ்சம் அடைய முடியாது என்பதால் இஸ்ரேலின் அறிவிப்பை ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்கள் நிராகரித்து விட்டன. இதனால் காசாவாசிகளின் துயரம் விவரிக்க முடியாத நிலைக்கு மாறி இருக்கிறது.
இதற்கிடையே போர் உக்கிரம் அடைந்துள்ள காசாவில் ஐ.நா. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு இந்த பணிகளை மோசமாக பாதித்து இருக்கின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.
உதவி வினியோகத்தை ஒருங்கிணைப்பதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதால், தேவைப்படும் இடங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. போர் தொடங்கியதுமே காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து விட்டது. இதனால் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளும் அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள முடியவில்லை.
காசாவின் தினசரி உணவு தேவையில் வெறும் 10 சதவீதமே தற்போது வினியோகிக்கப்படுவதாகவும் இதனால் விரைவில் அங்கு பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரிக்கும் என ஐ.நா.வின் உணவு திட்ட செய்தி தொடர்பாளர் அபீர் எடேபா அச்சம் வெளியிட்டு உள்ளார்.
கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த போரில் இதுவரை 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதில் காசாவில் மட்டுமே 11,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சுமார் 240 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களில் 4 பேர் இதுவரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. 4 பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஒருவரை ராணுவம் அதிரடியாக மீட்டு உள்ளது.
இந்த போர் தொடங்கியது முதல் காசாவில் 2,700 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பிணங்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவற்றை மீட்பதற்கு ஆளில்லாமல் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சில இடங்களில் அவர்களின் உறவினர்களே வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி தங்கள் உறவுகளை தேடி வரும் துயரம் நிலவுகிறது. இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தற்போது காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு அனுமதித்து உள்ளது.