உலக பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நடத்தியது. விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வு செயல்பாட்டுக்காக தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெறுவதற்காக மேடை ஏறிய தீபிகா பேசியபோது, “மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோரை ‘நீங்கள் தனி ஆள் இல்லை’ என்று சொல்லித் தேற்றுவேன். உறவும் பிரிவும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. மனிதர்களின் மன அழுத்தத்தால் இந்திய மதிப்பில் 7,11,910 கோடி வரையிலும் உலகப் பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கிறது.
மனப்பதட்டம் என்பது குணமாக்கக்கூடிய சாதாரணமான ஒரு பிரச்சினைதான். இந்த நொடியில்கூட உலகில் ஒருவர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார். இந்தநிலை மாற வேண்டும். அன்பும் மகிழ்ச்சியும் பரவினாலே மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் விரட்டலாம்“ என்றார்.
தன்னார்வ அமைப்பொன்றை உருவாக்கியுள்ள தீபிகா, அதன் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். தான் சந்தித்த மன உளைச்சல்களால் தனது வாழ்வில் நேர்ந்த அனுபவங்களையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, பதட்டத்தைப் போக்கும் வழிமுறைகளை கற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்.