X

மந்திரி மருமகனுக்கு சீட் கொடுப்பதற்கு எதிர்ப்பு – கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 24 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பல்லாரி ஆகிய 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 4 தொகுதிகளிலும் டிக்கெட் பெற பலரும் முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக கோலாரில் உணவுத்துறை மந்திரி கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார். இன்னொரு புறம் அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறி வருகிறாா்கள். இதனால் முடிவு எடுக்க முடியாமல் கட்சி மேலிட தலைவர்கள் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே மந்திரி கே.எச். முனியப்பாவின் மருமகனுக்கு கோலார் தொகுதியில் டிக்கெட் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், நஞ்சேகவுடா, கொத்தனூர் மஞ்சுநாத், எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில்குமார் ஆகிய 5 பேரும் கடும் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

மேலும் பங்காருப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமியும் ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று காலை அறிவித்தனர்.

மங்களூருவில் உள்ள சபாநாயகர் யு.டி.காதரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தொலைபேசியில் பேசி அனுமதி பெற்றனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூரு செல்ல தனி விமானத்தையும் முன்பதிவு செய்தனர். இதனால் விழித்தெழுந்த கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ், அதிருப்தியாளர்களை அழைத்து தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில் குமார் ஆகிய 2 பேரும் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு (சட்டசபை) வந்து மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்தனர். அவர்கள் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை வழங்க முற்பட்டனர். அப்போது மந்திரி பைரதி சுரேஷ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

அவர்களிடம் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தொலைபேசியில் பேசி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் தங்களின் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சபாநாயகர் யு.டி.காதர், தானே பெங்களூருவுக்கு வருவதாகவும், நீங்கள் மங்களூரு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் முன்பதிவு செய்த தனி விமானத்தை ரத்து செய்துவிட்டனர். இதுபற்றி கொத்தனூர் மஞ்சுநாத் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கோலார் தொகுதியில் தலித் சமூகத்தில் வலது சாரி பிரிவுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று நாங்கள் கூறி வருகிறோம். எக்காரணம் கொண்டும் மந்திரி கே.எச். முனியப்பாவின் குடும்பத்திற்கு வாய்ப்பு அளிக்கவே கூடாது என்று ஏற்கனவே கூறினோம். ஆனால் அதையும் மீறி கட்சி அவரது குடும்பத்திற்கு டிக்கெட் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிந்தோம். வாய்மொழியாக சொன்னால் சரிப்பட்டு வராது. அதனால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம். இன்று (நேற்று) பகலில் பெங்களூரு செல்கிறோம். சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குவோம்’

இவ்வாறு அவர் கூறினார்.