Tamilசெய்திகள்

மத்திர பிரதேசத்தில் குடிநீர் குழாயில் வந்த சாராயம் – போலீஸார் அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சன்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 கிராமங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள்.

ஆனால் சாராயம் காய்ச்சி விற்கப்படும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் குடிநீருக்கு பதிலாக சாராயம் வந்தது. குடிநீர் குழாயில் சாராயம் வருவதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குடிநீர் குழாயைச் சுற்றி பள்ளம் தோண்டினார்கள். அப்போது பூமிக்குள் 7 அடி ஆழத்தில் ஏராளமான சாராய ஊறல் பேரல்கள் இருந்தன. போலீசார் அந்த சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
சாராயம் காய்ச்சிய பிறகு அதை பேரல்களில் நிரப்பி பூமிக்கு அடியில் புதைத்து வைத்து அதற்கு மேல் ஆழ்துளை குடிநீர் குழாய் போல வடிவமைத்துள்ளனர். அதற்கு மேலே கைபம்பு மாட்டியுள்ளனர். குடிநீர் எடுப்பது போல் கை பம்பு மூலம் சாராயத்தை வெளியே எடுத்துள்ளனர். பின்னர் அதை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

8 பேரல்களில் இருந்த சாராயம், எத்தினல் ஆல்கஹால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 கிராமங்களும் வனப்பகுதிக்குள் உள்ளது. இங்கு போதிய ஆள் நட மாட்டம் இல்லை. எனவே இங்கு சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளனர். சாராயம் காய்ச்சிய தப்பியோடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.