மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் விலங்குகிறது – மத்திய அமைச்சர் தகவல்
சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர்.
நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது. மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.