மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 2-வது வாரத்திலேயே மத்திய மந்திரி சபை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தமாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இம்மாத இறுதியில் மத்திய மந்திரி சபை மாற்றத்துக்கு பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர் மோடிக்கு சிலர் மந்திரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என கருதுவதாக கூறப்படுகிறது. மேலும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்வைத்தும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பா.ஜனதா தேர்தல் வேலைகளை தற்போதே தொடங்கி உள்ளது. அதன்படி சில மாநிலங்களில் கட்சி ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மந்திரிகள் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. 10 முதல் 12 மந்திரிகள் வரை நீக்கப்படலாம் எனவும், சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.