மத்திய மந்திரி அமித்ஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்
மத்திய மந்திரி அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தனது மனைவி சோனல் ஷாவுடன் வந்தார். பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்தார். அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள வகுள மாதா விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அமித்ஷா தங்கினார்.
இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் மகா துவாரகம் வழியாக விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். இதையடுத்து இன்று மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகின்றனர்.
பின்னர் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.