டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மத்தியப் புலனாய்வுத் துறையும், அமலாக்க இயக்குனரகமும் தேவையில்லாமல் அனைவரையும் தொந்தரவு செய்கின்றன. நாடு இப்படி முன்னேற முடியாது. துணை நிலை ஆளுநர், சிபிஐ மற்றும் பிஜேபி ஆகியவை மதுபான ஊழலில் பல்வேறு அளவு பணத்தை மேற்கோள் காட்டியுள்ளன.
ஆனால் அது உண்மையில் என்னவென்று எனக்கு புரியவில்லை. அவர்களின் (பாஜக) தலைவர் ஒருவர், 8,000 கோடி ரூபாய் ஊழல் என்கிறார், துணை நிலை ஆளுனர் 144 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறார், சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் ஒரு கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறது. (இதனால்) மதுபான ஊழல் என்றால் என்னவென்று புரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.