மத்திய பிரதேச இடைத்தேர்தல் – பா.ஜ.க வெற்றி
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக இருந்தது. எனவே சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியிருந்தது.
அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்திருந்த காங்கிரஸ், இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெல்ல வேண்டிய நிலை இருந்தது. அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்றால், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்பது நேற்று மாலை உறுதியாகிவிட்டது. அதிகாலை 3 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. வெற்றி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேர்தல் நடந்த 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக 49.5 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
பாஜக வேட்பாளரும் அமைச்சருமான இமர்தி தேவி தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் ராஜேவிடம் தோல்வியடைந்தார். சான்வர் தொகுதியில் நீர்வளத்துறை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான துளசி சிலாவத், காங்கிரஸ் வேட்பாளர் பிரேம்சந்த் குட்டுவை விட 53264 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தார்.
இடைத்தேர்தல் வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் குற்றம்சாட்டி உள்ளார்.