மத்திய பிரதேசத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் பெய்த அதிகப்படியான கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி உள்ளன. மழை தொடர்பான விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ள நிவாரணத்திற்கு 6621 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை நிதி வழங்கவில்லை.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மழை பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 39 மாவட்டங்களில் உள்ள 284 தாலுகாக்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 60 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்து ரூ.16270 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர சுமார் 1.20 லட்சம் குடியிருப்புகள், 11,000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் 1,000 பாலங்கள் அல்லது தரைப்பாலங்கள சேதமடைந்திருப்பதாகவும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools