X

மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி – 149 ரன்னில் சுருண்டது தமிழகம்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இந்தூரில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் மத்திய பிரதேசம் – தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ் நாடு அணியின் கருணாகரன் முகுந்த், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகுந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த காந்தி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஹரி நிஷாந்த் 22 ரன்னில் வெளியேறினார். இதனால் தமிழ்நாடு 48 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கங்கா ஸ்ரீதர் ராஜூ உடன் கேப்டன் அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 101 ரன்னாக இருக்கும்போது கங்கா ஸ்ரீதர் ராஜூ 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த தமிழ் நாடு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தமிழ்நாடு 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் பாபா அபரஜித் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் சேர்த்தார். மத்திய பிரதேசம் அணி சார்பில் ஈஸ்வர் பாண்டே 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நடராஜன், விக்னேஷ் பந்து வீச்சில் மத்திய பிரதேசம் விரைவாக மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. நடராஜன் இரண்டு விக்கெட்டும், விக்னேஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: sports news