X

மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெற நினைப்பது தவறு – மேற்கு வங்காள எம்.பி அபிஷேக் பானர்ஜி பேச்சு

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வேட்புமனு, தேர்தல் நடைபெற வேண்டும் என மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை பா.ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா இந்த பஞ்சாயத்து தேர்தலில் எல்லா இடங்களிலும் தோல்வியை சந்திக்கும். அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும். இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டசபை, பாராளுமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பார்கள். பா.ஜனதா புறந்தள்ளப்படுவார்கள்.

மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெறலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் தவறாக இருக்கும். உங்களுக்கு (பா.ஜனதா) பாதுகாப்புப்படை உளளது. ஆனால், எங்களுக்கு மக்களுடைய ஆதரவு உள்ளது. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களை நாங்கள் நம்புகிறோம்.

தேர்தலுக்கு முன் பிரச்சாரத்திற்காக இங்கு வரும் வெளியாட்களை சார்ந்து நாங்கள் இருக்கவில்லை. ஏனென்றால், அதற்குப்பின் தேவைப்படும்போது அவர்கள் இங்கு இருப்பதில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியில் இருப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

அவர்கள் மத்திய படை துணையுடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம என நம்புகிறார்கள். மத்திய அரசு எனது குடும்பத்தை துன்புறுத்துகிறது. இதனால் என்னுடைய அரசியல் நடவடிக்கையை தடுத்துவிட முடியாது.

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

Tags: tamil news