மத்திய தேர்வாணை தலைவராக அரவிந்த் சக்சேனா நியமனம்!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 8-ந்தேதி யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினராக இணைந்த அரவிந்த் சக்சேனா, கடந்த ஜூன் 20-ந்தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.
டெல்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த சக்சேனா பின்னர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்தார். 1978-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேபினட் செயலாளராக இவர் பணியை தொடங்கினார். காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளில் இவர் திறம்பட செயல்பட்டவர் ஆவார்.