மத்திய அரசை காரணம் காட்டி சொத்து வரியை உயர்த்துவதா? – தமிழக அரசுக்கு சீமான் கேள்வி

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சொத்து வரியை உயர்த்தி உள்ள திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு,
தற்போது 150 விழுக்காடு வரையில் சொத்து வரியை அதிகரிக்கச் செய்திருக்கும் திமுக அரசின் நிலைப்பாடு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தற்போதைய சொத்து வரி உயர்வானது, வீட்டு வாடகையில் எதிரொலித்து, சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருக்கும் எளிய, நடுத்தர மக்களின் வாழ்நிலையில் பெரிய அளவில் பாதிப்பை
ஏற்படுத்தும். மக்கள் எதிர்கொள்ளப் போகும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி கவலை கொள்ளாது, போகிற போக்கில் ஒன்றிய அரசின் நிதி ஆணையப் பரிந்துரையை காரணமாகக் காட்டிவிட்டு
தப்பிக்க நினைப்பது திமுக அரசின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது.

மண்ணையும் மக்களையும் பாதிக்காத வகையில், திட்டங்களை தீட்டி, உற்பத்தியை பெருக்கி அதன்மூலம் நிலைத்த வளமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தமிழக அரசு,
அதைச் செய்யத் தவறி, மக்களை கசக்கிப் பிழிந்து வரியை வசூலித்து அதன்மூலம் ஆட்சிபுரிய நினைப்பது கொடுங்கோன்மையின் உச்சம்.

ஆகவே, மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். அரசின் நிதியாதாரத்துக்கு மாற்றுப் பொருளாதாரப்
பெருக்கத்துக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools