Tamilசெய்திகள்

மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3-ந் தேதி ராமேஸ்வரம், தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, பயன்படுத்திய இரண்டு நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்கள்.

பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப்பு படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு-பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடி தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதை கண்டிக்கிற வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பஸ் நிலையம் அருகில் உள்ள அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் முன்பு மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.