மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டன. அதில் கூறியிருப்பதாவது:-
தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது.
தொழிலாளர் மாநாடு நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பல மத்திய மந்திரிகள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பற்றி பேசுவதற்காக மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொழிலாளர் சட்டங்களை சிதைத்து வருவதுடன், தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது.
அரசு பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டது. தேசநலனுக்கும், வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.
12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. ஏர் இந்தியாவை 100 சதவீதம் விற்பது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். ரெயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 150 தனியார் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பையும் மீறி வங்கிகள் இணைக்கப்பட்டன. நிலக்கரி துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை போக்குவரத்து, இன்சூரன்ஸ் போன்றவை தனியார்மயமாக்கப்படுகிறது.
எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் மொத்தம் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.