பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, அவற்றில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலி பணியிடங்கள் உள்ளன.
ராஜினாமா, மரணம், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி இடங்கள் உருவாகின்றன. இந்த காலியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் நிரப்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.