சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி பாக்கி குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி பாக்கி தொகை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.