X

மத்திய அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தி.மு.க. மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, பிரசார குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பாதங்களில் காணிக்கையாக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு இரவு, பகல் பாராமல் உழைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் அணி நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

* தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு பாராட்டுகளையும், பெருவாரியான வாக்குகளை தந்து வெற்றி பெற செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

* மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த முறையாவது சட்டமாக்க வேண்டும்.

* கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை ஏற்று மீண்டும் இந்தியை திணிக்க மத்திய அரசு முற்பட்டால் மிகுந்த எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தாய்மொழி தமிழ், உலக தொடர்புக்கு ஆங்கிலம் என்று அண்ணா சட்டமாக்கிய இருமொழி கொள்கையை ஏற்று தமிழகம் அமைதியாக இருக்கும் நேரத்தில் மீண்டும் இந்தியை திணிக்க நினைப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம். எக்காரணத்தை கொண்டும் இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

* மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு செயலாளராக இருந்து, இறுதியாக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்த மறைந்த வசந்தி ஸ்டான்லிக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags: south news