மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டாக பேரணி!
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.
முதலில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார்.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்தான் ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் பிறகு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினார். இதில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார்.
இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார் ஜுனகார்கே, அபிஷேக் சிங்வி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று கெஜ்ரிவால் கூட்டியுள்ள பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.
இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரபுல்படேல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் ராஷ்டீ ரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி வந்து குவிந்துள்ளனர். மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் டெல்லி பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், டெல்லி பேரணியில் ராகுல்காந்தி பங்கேற்க பேச்சு நடத்தி இருப்பதாகவும், அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்துள்ளனர். கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் ஒரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கிளப்பி வருகிறது. மற்றொரு புறம் பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டித்து ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து ஒன்று திரண்டு நடத்தும் பேரணிகள் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு கடும் சவாலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.