மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? – சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு, கலைஞர் கைவினைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த திட்டத்தின் சிறப்பம்சங்களையும், அதன் மூலம் பயன் பெறுவதற்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமும், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றுதான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்கவேண்டும். அதேவேளையில், விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்கவேண்டும்” என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.
இது, தங்கள் குடும்ப தொழிலில் 18 வயதுக்கு முன்பே ஈடுபட தூண்டும் வகையில் உள்ளது. மேலும் மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தை குறைத்து குலத்தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை. குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல் மாணவர்கள் உயர்கல்வி கனவை சிதைக்காமல் அதேநேரத்தில் இவ்வகை தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ முழுக்க, முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப, வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வகுப்பு அடிப்படையில் என சுருங்காமல், தொழிலில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தமிழ்நாடு அரசு சார்பாக வந்த அறிவிப்பில் விண்ணப்பிக்க தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.