X

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்து உள்ளது. தேவை குறைந்துள்ள நேரத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

தொழிற்சாலைகளுக்கு நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலம் பீகார் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.

உணவும், பணமும் இன்றி லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. அவர்களை, அவர்களுடைய வீடுகளுக்கு பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மக்களின் இப்போதைய தேவை கடன் அல்ல; பணம்தான். எனவே ஏழைகளின் கைகளில் இப்போது பணத்தை வழங்க வேண்டும். அரசு கடன் கொடுக்கும் வங்கிகள் போல் செயல்படக்கூடாது. விவசாயிகள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு பணத்தை நேரடியாக செலுத்த வேண்டும்.

இதில் தாமதம் ஏற்படக்கூடாது. குழந்தை பாதிக்கப்படும் போது அதற்கு தாய் உணவு கொடுத்து காப்பாற்றுவாளே தவிர கடன் கொடுக்க மாட்டாள். அதுபோல்தான் அரசும் செயல்பட வேண்டும். இல்லையேல் பெரிய அழிவு ஏற்படும்.

நாம் மக்கள் கையில் பணத்தை கொண்டு சேர்க்கவில்லை என்றால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வராது.

பொருட்களுக்கான, சந்தைக்கான தேவையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா பாதிப்பை விட பொருளாதார சரிவு மோசமாக இருக்கும்.

நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்யாமல் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு குறைந்தபட்ட வருவாய் உத்தரவாத திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. இந்த திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த முடியாது என்றால், தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு தற்காலிகமாகவாவது அமல்படுத்த வேண்டும். என்னுடைய யோசனைகளை அரசு கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன். ஏனெனில் மக்களின் எண்ணத்தைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன்.

ஊரடங்கை நீக்கும் போது மிகவும் கவனமாக நீக்க வேண்டும். முதியோர், பெண்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.