மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவால் இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பாராளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து, தி.மு.க.வின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னார். பாதிப்பை தெரிந்தே, மத்திய அரசு அதனை கொண்டுவந்திருக்கிறது.
மின்சார வாரிய கட்டமைப்புகள் ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை எல்லாம் தனியார் துறைகள் பயன்படுத்தி மின் வினியோகம் செய்வதற்கான வழிவகைகள் மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய இடங்களில், தனியார் துறையினர் மின் வினியோகத்தை செய்வதற்கான முயற்சிகளை செய்வார்கள். இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.
மாநிலங்கள் உருவாக்கியுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களை மத்தியில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முழுவதுமாக பறித்துகொள்கிறது. மேலும் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என்றால், அதற்கான அபராத தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து, 8-12-2021 அன்று முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த மசோதா விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. எந்த முடிவும் எடுக்கவில்லை. இலவச மின்சார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை இந்த மசோதாவில் இருக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த மசோதா பாராளுமன்றத்திலோ, நிலைக்குழுவிலோ விவாதத்துக்கு வரும்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரலை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.