திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறியதாவது:-
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. மத்தியில் மதவெறி, மத மோதலை உருவாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ். ஆக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கெல்லாம் மாற்றம் வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் மூலம் பா.ஜனதா ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
இதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும். அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை மாநில மாநாட்டில் நிறைவேற்றியுள்ளோம். நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், கட்டுமான பொருட்கள், மருந்து, மாத்திரைகள் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மிகக்கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த சட்ட திருத்தத்தால் மின்கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற 30-ந் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இந்த மாற்றங்கள் படிப்படியாக தொடரும். பா.ஜனதாவை விட்டு மாநில கட்சிகள் வெளியேறுவார்கள். அதன் தொடக்கம்தான் பீகார். அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் பா.ஜனதாவின் கையில் தான் உள்ளது. அ.தி.மு.க. சுயமாக செயல்படாத காரணத்தால் பா.ஜ.க. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.