Tamilசெய்திகள்

மத்திய அரசின் திட்டத்தால் தமிழகம் பயனடைந்துள்ளது – அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்க வந்த மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு சீலநாயக்கன்பட்டியில் மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சேலம் கோட்டையில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

மத்திய அமைச்சரவையில் முதல் தலைமுறை அரசியல்வாதிகளை மந்திரிகளாக பொறுப்பேற்க வைத்த பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காமல் அமளி செய்ததால் மக்களிடையே ஆசி வாங்க இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. 3 நாட் களில் 169-வது நிகழ்ச்சியாக சேலத்தில் நிறைவடைகிறது.

தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும், மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் வாய்ப்பளித்த பிரதமருக்கும் சேலம் மக்களுக்கும் நன்றி, நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மத்திய அரசு அறிவித்த 2 ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்தரபிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. மீன் வளத்துறை சார்பில் சென்னையில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ. 3 லட்சம் கோடியில் அமைக்கப்பட உள்ளது.

மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிதி ஒதுக்கீடு என ஒட்டுமொத்தத்தில் மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பலன் அடைந்துள்ளது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இல்லை. பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக கூறிய தி.மு.க. 3 ரூபாய் குறைத்துள்ளது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.

மகளிருக்கு மாதந்தோறும் 1000 உதவித்தொகை, பயிர்க்கடன், கல்விக்கடன் ஆகிய வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.