மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் – பா.ஜ.க முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பாஜக துணை முதலமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்பட 12 முதல்வர்கள் மற்றும் எட்டு துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கதி சக்தி, டிபிடி அமலாக்கம், இ-மார்க்கெட் ப்ளேஸ் உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களை மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்.
பயிர் உற்பத்தித் திறனில் நானோ உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து அவர் எடுத்துரைத்தார். வணிகம் செய்வதற்கான சூழலை எளிதாக்குவது மற்றும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அறிவுறுத்தினார்.
இளைஞர்கள் அதிக அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக சிறந்த வசதிகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கிராமங்கள் மற்றும் நகரங்களின் வளர்ச்சி குறித்த முக்கியத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.