தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றதோ அதேபோன்று வெற்றி பெறும்.
கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். எனவே, இந்த தேர்தலில் அக்கூட்டணி வீழ்த்தப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு போன்ற மறுவாழ்வுப் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் மத்திய அரசு புறக்கணித்தது இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிரானது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது.
இந்த உண்மையை மறைத்துவிட்டு 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம் என்று பொய் பேசி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்காததால், இந்த தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எவ்வித முன் நடவடிக்கையும் இல்லாமல் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக 12 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பா.ஜ.க. அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். இதையெல்லாம் அவர்கள் மறக்கவில்லை.
புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்துவிட்டு, விவசாயத்தைப் பாதுகாப்போம், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம் எனக்கூறி இரட்டை வேடம் போடுகிறார்கள்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்து இருக்க மாட்டார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை நடவடிக்கை காரணமாக சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் மத்திய மந்திரி பல்லம்ராஜூ, மகாராஷ்டிர மாநில மந்திரி நிதின் ராவத், தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மாநில செயலாளர் அகரம் கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.